புகை பிடிப்பவர்களுக்கு ரூ.79,000 கோடி இழப்பீடு! சிகரெட் நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு

Web Developer

நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு
புகை பிடிப்பவர்களுக்கு ரூ.79,000 கோடி இழப்பீடு! சிகரெட் நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு
கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் 1,240 கோடி டாலர்கள் (சுமார் ரூ.79,273 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கியூபெக் மாகாண புகை பிடிப்போர் சார்பாக, அந்த மாகாண உயர் நீதிமன்றத்தில் இரு மனுக்கள் கடந்த 1998-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்தப் பழக்கம் காரணமாக நுரையீரல், தொண்டைப் பகுதியில் புற்றுநோயால் அவதிப்படுபவர்கள் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் சார்பாக அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவில், சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள், புகை பிடிப்பதால் ஏற்படும் தீமையைக் குறித்த போதிய விழிப்புணர்வை, தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தத் தவறியாதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பிறருக்கு உடல்ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது என்ற அடிப்படை கடமையிலிருந்து அந்த நிறுவனங்கள் தவறிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கொள்கை நெறிமுறைகள் எதுவுமின்றி சிகரெட்டுகளை விளம்பரப்படுத்தியதாகவும், இதுதொடர்பான ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து கியூபெக் உயர்நீதிமன்றம் அந்த மனுக்கள் மீதான விசாரணையை அண்மையில் தொடங்கியது.
விசாரணையில் மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 3 சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களும், புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 1,240 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை உத்தவிட்டது.
கனடா நாட்டு நீதித்துறை வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக அறிவிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தது.
இதுகுறித்து சிகரெட் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
1950-ஆம் ஆண்டுகளிலிருந்தே கனடா நாட்டில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இருந்து வருகிறது.
சிகரெட் பெட்டிகளின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ எச்சரிக்கையும், இந்த விழிப்புணர்வுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை எனக் கூறி இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாகக் கேட்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று சிகரெட் நிறுவனங்கள் கூறின.